
தற்போது நடைமுறையில் உள்ள கொடூரமான 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக, ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ (PSTB) நாளைய தினத்திற்கான (06) பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் (இல. 185) முதலாவது வாசிப்பிற்காக உள்வாங்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் (பக்கம் 231), நாட்டின் அனைத்து மக்களின் குடியியல் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் நீக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தது. இருப்பினும், தற்போதைய அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், பழைய சட்டத்தில் காணப்பட்ட மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முரணான ஏற்பாடுகளை நீக்குவதற்குப் பதிலாக, நிர்வாகத்துறையின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்தும் புதிய சட்டக் கட்டமைப்பையே முன்வைத்துள்ளது.
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பான சர்வதேச தராதரங்களிலிருந்து விலகி, “பயங்கரவாதம்” என்ற சொல்லுக்கு மிகவும் பரந்தளவிலான வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளது. “பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவித்தல்,” “ஒரு செயலைச் செய்யும்படி அல்லது செய்யாதிருக்கும்படி அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தல்,” “பொதுச் சொத்துக்களுக்கு, தனியார் போக்குவரத்து முறைமைக்கு, ஏதேனும் உட்கட்டமைப்புக்கு சேதம் ஏற்படுத்தல்,” “சூழலுக்கான பாரதூரமான அல்லது நீண்டகாலச் சேதம்,” “டிஜிட்டல் கட்டமைப்பைச் சீர்குலைத்தல்” மற்றும் “பொதுச் சுகாதாரச் சீர்கேட்டினை ஏற்படுத்தல்” என்பன இச்சட்ட வரைவின் கீழ் குற்றங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மிக அண்மையில், அதிகாரப் பகிர்வு, சமஷ்டி முறைமை மற்றும் காணி உரிமைகள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்திருந்த கருத்துக்கள், நாட்டினைப் பிளவுபடுத்துவதாகவும் இனக்குழுக்களுக்கு இடையில் முரண்பாட்டினை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தன என அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அவர் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததனை இவ்விடத்தில் நினைவூட்டுவது அவசியமாகும்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில், சமஷ்டி, அதிகாரப் பகிர்வு, தன்னாட்சி, காணி உரிமைகள் போன்ற தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் பல சந்தர்ப்பங்களில் தேசிய பாதுகாப்பு அல்லது நாட்டின் ஒருமைப்பாடு என்ற கண்ணோட்டத்தின் ஊடாகவே அணுகப்பட்டுள்ளன. அந்தப் பின்னணியில், இச்சட்டத்தில் உள்ள பரந்த வரைவிலக்கணங்கள், நியாயமான அரசியல் கோரிக்கைகளையே “பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்” எனப் பொருள்கொள்ளும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.
“பொதுச் சொத்துக்களுக்கு, தனியார் போக்குவரத்து முறைமைக்கு, ஏதேனும் உட்கட்டமைப்புக்கு சேதம் ஏற்படுத்தல்,” “சூழலுக்கான பாரதூரமான அல்லது நீண்டகாலச் சேதம்,” “டிஜிட்டல் கட்டமைப்பைச் சீர்குலைத்தல்” மற்றும் “பொதுச் சுகாதாரச் சீர்கேட்டினை ஏற்படுத்தல்” போன்ற, ஏற்கனவே சாதாரண குற்றவியல் சட்டங்களின் கீழ் கையாளப்படக்கூடிய குற்றச்செயல்கள் கூட, இச்சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடிய பயங்கரவாதக் குற்றங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.
அடக்குமுறையான சட்டங்கள் ஆட்சியாளர்களின் இருப்பினை உறுதிப்படுத்தும் கருவிகளாகப் பயன்படுத்தப்படுவது இலங்கையின் வரலாற்றில் புதிதல்ல. ஆனால் அவற்றின் அமுலாக்கம் அனைத்து மக்களையும் சமமாகப் பாதித்ததில்லை. கடந்தகால அனுபவங்கள், இத்தகைய சட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் தமிழ் மக்கள்மீது அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.
எனவே, இச்சட்டமும் அமுலாக்கத்தின் நடைமுறையில் தமிழ் மக்கள்மீது விகிதாசாரமற்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் முற்றிலும் ஆதாரமற்றதல்ல. தெற்கில் இடம்பெறும் வெகுஜனப் போராட்டங்கள் சாதாரண குற்றவியல் சட்டங்களின் கீழ் கையாளப்படும் அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கில் காணி ஆக்கிரமிப்பு, தொல்பொருள் ஆக்கிரமிப்பு அல்லது இராணுவமயமாக்கலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சமூகங்கள் மீது பயங்கரவாதச் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதற்கான அபாயம் தொடர்கிறது.
வடக்கு-கிழக்கில் தொடரும் இராணுவமயமாக்கல் மற்றும் உளவுத்துறை கண்காணிப்புச் சூழலில், இச்சட்டம் தனிநபர் உரிமைகளை மட்டுமன்றி, தமிழ் மக்களின் கூட்டு உரிமைகளையும் பாதிக்கக்கூடியதாக உள்ளது.
ஒரு தேசிய இனமாக, தமிழர்கள் தமது வரலாற்று நினைவுகளையும் இழப்புகளையும் கூட்டாக நினைவுகூரும் உரிமை கொண்டவர்கள். இருப்பினும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அல்லது மாவீரர் நாள் போன்ற நிகழ்வுகள், இச்சட்டத்தின் பரந்த வரைவிலக்கணங்களின் அடிப்படையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களாகக் கருதப்படுவதற்கான ஆபத்தை உருவாக்குகின்றன. இதனால் நினைவுகூரல், அரசியல் வெளிப்பாடு மற்றும் பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றுக்கிடையிலான எல்லைகள் மேலும் மங்கலாகும் அபாயம் உள்ளது.
இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்காக செயற்படுகின்ற/குரல்கொடுக்கின்ற புலம்பெயர் தமிழர்களின் அல்லது சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் செயற்பாடுகளையும் இச்சட்டத்தின் எல்லை கடந்த அதிகார வரம்பு (Extraterritorial Jurisdiction) தொடர்பான பிரிவுகள் பாதிக்கக்கூடும். தாயகத்தில் உள்ள மக்களின் அரசியல் வெளிப்பாட்டு இடம் குறுகும் நிலையில், வெளிநாடுகளில் இயங்கும் ஆதரவு வலையமைப்புகளும் அதிக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான அச்சம் காணப்படுகிறது.
மேலும், அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாகப் பிரகடனப்படுத்தும் பரந்த அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளமை, அரசியல் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மீது ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் கவலைகளை எழுப்புகிறது.
நிதி நடவடிக்கைகள் தொடர்பான பணிக்குழுவின் (Financial Action Task Force – FATF) பரிந்துரை 8-ஐ மேற்கோள்காட்டி, அரசு சாரா நிறுவனங்களையும் சிவில் சமூக அமைப்புகளையும் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
உண்மையில் FATF வழிகாட்டல்கள், சிவில் சமூகத்தின் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில் இடர்-அடிப்படையிலான (risk-based) மற்றும் இலக்குக்கேற்ற (targeted) நடவடிக்கைகளையே வலியுறுத்துகின்றன. ஆனால் நடைமுறையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போன்ற அமைப்புகளின் நிதி நடவடிக்கைகள் அதிக கண்காணிப்புக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படுவதற்கான அபாயம் உள்ளது.
இதனையொத்த அணுகுமுறையையே ICCPR சட்டத்தின் 3ஆம் பிரிவின் அமுலாக்கத்திலும் காண முடிகிறது. வெறுப்புப் பேச்சைத் தடுக்க உருவாக்கப்பட்ட சட்டங்கள், சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தை விமர்சிப்போரை அல்லது குறிப்பிட்ட சமூகங்களை இலக்குவைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.
வெறுப்புப் பேச்சுத் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் ரபாட் செயல் திட்டம் (Rabat Plan of Action) முன்வைக்கும் ஆறு பகுதிகளைக் கொண்ட சோதனை (Six-part Threshold Test) இலங்கையின் சட்ட அமுலாக்கத்துறையினால் சரியான முறையில் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவிவருகிறது.
இச்சட்டமூலம் பொலிஸார், முப்படையினர் மற்றும் கடலோரக் காவல் படையினருக்கு விரிவான தேடுதல் மற்றும் கைது அதிகாரங்களை வழங்குகிறது. அதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குத் தடுப்புக் காவல் கட்டளைகளை (Detention Orders) பிறப்பிக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
ஒருவர் கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டாலும், ஏற்கனவே தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், அதனைக் கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் நீதிவானுக்கு மறுக்கப்பட்டுள்ளது. தடுத்துவைத்தற் கட்டளை பிறப்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் சந்தேக நபரினை கட்டயமாக தடுப்புக்காவலில் வைக்க வேண்டிய தேவையை நீதவான் மீது இச் சட்டம் திணிக்கின்றது. சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் நீதித்துறை வகிக்கும் மேற்பார்வைப் பங்கு, இச்சட்டத்தின் கீழ் பாரதூரமான முறையில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டிரண்டு மாதங்களாக ஒரு வருட காலம் வரை நீடிக்கப்படக்கூடிய தடுத்துவைத்தற் கட்டளை முடிவினை அண்மித்த காலப்பகுதியில் ஒருவர் மீது குற்றப்பத்திரிகை (indictment) பதிவு செய்யப்பட்டால், அவருக்கு பிணை வழங்கப்படலாம் இல்லையா என்பது தொடர்பான ஏற்பாடுகள் இச் சட்டத்தில் இல்லை. இது அவருடைய வழக்கு முடிவடையும் வரை அவருக்குப் பிணை வழங்கப்படாமல் இருப்பதற்கான சாத்தியக்கூற்றினை ஏற்படுத்துகிறது. பொலிஸாரால் தடுத்துவைத்தற் கட்டளையை நீடிப்பதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கை, அவ்வாறு நீடிப்பதற்கான தகுந்த காரணங்கள் இல்லாததனால் மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்திலும் சந்தேக நபரினை வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது. மாறாக மேல் நீதிமன்றம், குறித்த சந்தேக நபரினை விளக்க மறியலில் இடலாம் அல்லது பிணையில் விடுவிக்கலாம். இது, போதிய ஆதாரங்கள் இல்லாத சந்தர்ப்பங்களிலும் ஒருவர் நீண்டகாலம் விளக்கமறியலில் இருக்க வேண்டிய நிலையை உருவாக்கக்கூடும் என்ற அச்சத்தினைத் தோற்றுவிக்கின்றது.
தடுத்துவைத்தற் கட்டளைகளை மறுஆய்வு செய்யும் “சுயாதீன பரிசீலனைக் குழு” தடுத்துவைத்தற் கட்டளையினைப் பிறப்பிக்கின்ற அமைச்சு செயலாளரின் அமைச்சரால் நியமிக்கப்படுகிறது. அதாவது தடுத்துவைத்தற் கட்டளையினை பிறப்பிக்கின்ற செயற்பாடும், அக்கட்டளையை பரிசீலனை செய்கின்ற குழுவும் ஒரே அதிகாரக் கட்டமைப்பினால் உருவாக்கப்படுகின்றது. மேலும், குறித்த குழுவின் பரிந்துரைகளை அமைச்சர் கட்டாயமாக ஏற்க வேண்டிய அவசியமும் இல்லை.
அதேபோன்று, ஏதேனும் அமைப்பு ஒன்று இச் சட்டத்தின் கீழான தவறொன்றினை செய்வதாக சனாதிபதி நம்புவதற்கான “நியாயமான ஏதுக்களை” கொண்டிருந்தால் குறித்த அமைப்பினை தடைசெய்தற் கட்டளை ஒன்றைப் பிறப்பிப்பதன் மூலம் தடை செய்ய முடியும். ஜனாதிபதியினுடைய “நம்பிக்கையின்” அடிப்படையில் எடுக்கப்படும் இது தீர்மானத்துக்கு சட்ட ரீதியிலான வரையறை/அடிப்படை எதுவும் தேவைப்படுத்தப்படவில்லை. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாக, நபரொருவர் குறித்த பிரதேசத்துக்கு அல்லது இடத்துக்கு பயணிப்பது, மற்றும் தகவல் தொடர்பாடல்கள் மீது மட்டுப்பாடுகளை விதிக்கலாம். இம் மட்டுப்பாடுகள் தொடர்பான காலவரையறை இச் சட்டத்தில் விதித்துரைக்கப்பதாத்தாதான் காரணமாக, இக் மட்டுப்பாடுகள் காலவரையறையின்றி விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும், பாதுகாப்புச் செயலாளர் எந்தவொரு இடத்தையும் “தடை செய்யப்பட்ட இடமாக” அறிவிக்கக் கூடிய அதிகாரத்தையும் இச்சட்டம் வழங்குகிறது. இத்தடை தொடர்பான காலவரையறையும் சட்டத்தில் குறித்துரைக்கப்படவில்லை.
சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உரியது. ஆனால், இச்சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பான முக்கியமான விதிமுறைகளை வகுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளமை, அதிகாரப் பிரிப்பு (Separation of Powers), மக்களின் இறைமை மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறல் ஆகிய அடிப்படைக் கோட்பாடுகள் தொடர்பில் கேள்விகளை எழுப்புகிறது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம், அதன் அடிப்படை அடக்குமுறைத் தத்துவத்தையே புதிய பெயரிலும் புதிய சட்டக் கட்டமைப்பிலும் தொடர முயல்கிறது என்ற அச்சத்தை இச்சட்டமூலம் ஏற்படுத்துகிறது.
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான சட்டங்கள் எந்த அரசிற்கும் தேவைப்படலாம். ஆனால் அவை சட்ட ஆட்சி, நீதித்துறை மேற்பார்வை, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இல்லையெனில், அவை மக்களைப் பாதுகாக்கும் கருவிகளாக அல்லாது, அரசை விமர்சிப்போரை கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் கருவிகளாக மாறும் அபாயம் உள்ளது.
இவ்விடயம் அனைத்து இலங்கையர்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் தொடுகின்ற ஒரு ஜனநாயகக் கேள்வியாக இருந்தாலும், தமிழ் மக்களுக்கு இது ஒரு கூடுதல் வரலாற்றுப் பரிமாணத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில், இத்தகைய அசாதாரண அதிகாரங்கள் கடந்தகாலத்தில் எவ்வாறு அமுலாக்கப்பட்டன என்பதற்கான அனுபவத்தை அவர்கள் ஏற்கனவே சுமந்து வருகின்றனர். எனவே, இச்சட்டமூலத்தை அதன் சட்டப்பூர்வ உரையின் அடிப்படையில் மட்டுமன்றி, அது நடைமுறையில் யார்மீது, எவ்வாறு, எந்த அரசியல் சூழலில் பயன்படுத்தப்படலாம் என்பதன் அடிப்படையிலும் மதிப்பிட வேண்டியது அவசியமாகும். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், இது வெறுமனே ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பற்றிய விவாதமல்ல; அரசியல் உரிமைகள், நினைவுகூரல், கூட்டான அடையாளம் மற்றும் ஜனநாயக வெளி ஆகியவற்றின் எதிர்காலம் பற்றிய கேள்வியாகும்.
Leave a Reply